Monday, April 11, 2005

தலைகீழ்

தலைகீழ்

ஒற்றைக் கையில் ஊன்றித்
தலைகீழாய் நின்று முகம்புதைக்கிறான்
கவிழ்ந்த நிலவுகளுள் உதிர்ந்த நட்சத்திரங்களுள்
பற்களில் அரைத்த
நட்சத்திரப் பொடிகளைக் கோப்பைக்குள் தூவி
விளிம்புவரை ஊற்றுகிறான்
உன் இதயத்தை அறுக்கும் குடியென்கிறான்
சிலநிமிடத் துன்பமே
தவிர்
தவிரென்பது உன் கோப்பைக்கும்
கழுத்துக்குமிடையில் அசையும் தளை
நீ அறுக்கவேண்டியது அதுவே என்கிறான்

கோப்பையை உயர்த்திக் குடிக்கிறேன்
தலைகீழாய்த் தொங்கித் துடித்தசையும்
கரும்பச்சை நாளங்கள்
கறுப்புத் தலைமயிர்க் கற்றைகள் பார்த்தவாறு
ஒவ்வொரு மிடறும் ஒவ்வொரு புன்னகை
ஒவ்வொரு புன்னகை ஒவ்வொரு துகள்
தொண்டை கிழிப்பதும்
குடலைக் கிழிப்பதும் என் இதயம் கிழிப்பதும்
எனது தேர்ந்தெடுப்பின் துகள்களே

தலைகீழாய் நிற்கும் அவன் கைகள் தலைகளினூடாய் நுழைந்து
நீலத் தார்ப்பாலின் வைக்கோல் மணம்வீச என்னை நெருங்கும் விசித்திர மிருகம்
புன்னகைத்து என் உதட்டில் உறைந்திருக்கும்
துகள்களை ரத்தத்தை நக்குகிறது
நாவைச் சுழற்றிப் புன்னகைக்கிறது
மண்படிந்த தனது பாதங்காட்டிப் பெருமூச்சிடுகிறது
உள்ளங்கையில் நெரிபடும் சீனிக்கற்களுடன்
கோப்பையை நொறுக்குகிறேன்
பொடித்த கோப்பையை விதைத்த இடத்தில்
நீங்கள் இப்போது பார்த்துக்கொண்டிருப்பதே
நெல்மரங்கள் நிறைந்த காடு.

-மாண்ட்ரீஸர்

3 comments:

இளங்கோ-டிசே said...

//ஒவ்வொரு மிடறும் ஒவ்வொரு புன்னகை
ஒவ்வொரு புன்னகை ஒவ்வொரு துகள்
தொண்டை கிழிப்பதும்
குடலைக் கிழிப்பதும் என் இதயம் கிழிப்பதும்
எனது தேர்ந்தெடுப்பின் துகள்களே//
இந்த வரிகள் அதிகம் பிடித்திருந்தன. மாண்ட்ரீஸர், நீங்கள் என்ன அர்த்தத்தில் இதை எழுதினீர்களோ தெரியாது, எனக்குத் தெரிந்த வாசிப்பில் நான் புரிந்துகொண்டவிதத்தில் இந்தக்கவிதையில் என்னை மிக நெருக்கமாய் உணர்ந்தேன்.

பாலு மணிமாறன் said...

உங்கள் கவிதைக்கைகள் ஓவியம்தான் வரைகின்றன - சமயங்களில் அது புகைப்படமாகவும் பரிணமித்து விடுகிறது.

Anonymous said...

Where did you find it? Interesting read » » »