க்வென்டின் டாரன்டினோவின் முந்தைய அனைத்துப் படங்களுக்கும் (Reservoir dogs, Pulp ficiton, Jackie Brown, Kill Bill Volume I&II) பெரும் விசிறி நான். வன்முறையைத் தூக்கிப்பிடிக்கும் படங்கள் என்று விமர்சனங்கள் இருந்தாலும்கூட, வெளிப்படையான வன்முறை என்பதை, வன்முறை தரும் அதிர்ச்சியையும் தாண்டி ஒரு குரூர நகைச்சுவை போலச் சித்தரிப்பதில், படு நக்கலான வசனங்களில், மிக அசலான soundtrack களில் என்று அனைத்துப் படங்களும் ரசிக்கத்தக்கவகையில் இருக்கும். தமிழில்-அல்லது, இந்திய மொழிகளில் எனில், ராம்கோபால் வர்மாவை ஒரு ஒப்புமையாகச் சொல்லலாம். ரெசர்வார் டாக்ஸில் போலீஸ்காரனொருவன் காதை அறுப்பது, பல்ப் ஃபிக்-ஷனில் (ஃபிக்ஷன் ஃபிக்ஷன் ஆக்ஷன் என்று 'கதாகாலக்ஷேபம்' ஸ்டைலில் எ-கலப்பையில் வருவதை யாராவது சரிசெய்தால் நன்றாயிருக்கும்...) பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டும் கொலைகாரர்கள், மூன்று தலைமுறைகளின் ஆசனத்துளைகளுக்குள் ஒளித்துவைக்கப்பட்டிருந்து (முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், வியட்நாம் யுத்தம்) சிறுவனாயிருக்கும் ப்ரூஸ் வில்லிஸுக்கு பரம்பரைக் கடிகாரம் வந்து சேர்வதில் என்று காணக்கூடிய எள்ளல்; கொலைகாரர்கள் கொள்ளைக்காரர்கள் இரட்டைத்துரோகிகள் (double-crossers?) 'கீழ்ப்பிறவிகள்' என்று நான்கே நான்கு படங்கள் மூலமாக டாரன்டினோ கடைவிரித்த உலகத்தைப்போலவே இன்னொரு புறமும் ஒரு உலகத்தை விரிக்கமுயன்றுகொண்டிருந்த ராபர்ட் ரோட்ரிகஸின் (Robert Rodriguez), சில முயற்சிகள் தடுமாற்றங்களுக்குப்பின் வந்திருக்கும் Sin City யைக் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பார்த்தேன். ரோட்ரிகஸின் முந்தைய El Mariachi படங்களும் Spy Kids படங்களும் இங்கே மிகவும் பிரபலமானவை எனினும், ஸ்பை கிட்ஸ் படத்தை முழுக்க டிஜிட்டல் முறையில் படம்பிடித்ததையும்ம், சினிமா என்பதை சட் சட்டென்று சுருக்கமாக ஒரு குடிசைத்தொழில் மாதிரி வெகு குறைந்த பணத்தில் எடுக்கமுடியும் என்று ரோட்ரிகஸ் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருப்பதையும் திரைப்படங்களில் ஆர்வமுள்ளவர்கள் பார்க்கவேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு டாரன்டினோவையும் இழுக்க முயற்சிக்கும் ரோட்ரிகஸ், இந்தப் படத்தில் சில பகுதிகளை டாரன்டினோவை விட்டு இயக்கச்செய்திருக்கிறார். டாரன்டினோ குறித்துத் தனியாக ஒருதரம் எழுத நோக்கமிருப்பதால், இப்போது சின் சிட்டி குறித்து...
ஃப்ராங்க் மில்லர் என்பவரால் உருவாக்கப்பட்ட Sin City என்ற Graphic novel தொடரின் மூன்று கதைகளை இணைத்து உருவாக்கப்பட்டது இந்தப் படம். ஓய்வுபெறச் சில நாட்களே இருக்கும் காவல்துறைத் துப்பறிவாளன் கார்டிகன் (ப்ரூஸ் வில்லிஸ்), தன்னுடன் ஒரு இரவைக் கழித்த, தான் மிகவும் நேசித்த ஒரு வேசியைக் கொலைசெய்துவிட்டவர்களைத் தேடிச் செல்லும் வழியிலெல்லாம் முரட்டுத்தனமான அழிவை விசிறிவிடும் மார்வ் (மிக்கி ரூர்க்), ஒரு முரட்டுத்தனமான போலீஸ்காரனைக் கொன்றுவிட்டு, 'பழைய நகரம்' என்றழைக்கப்படும் விபச்சாரத் தொழில்நிறைந்த புறநகர்ப் பகுதியில் தன் தோழிகளான வேசிகளின் துணையுடன் அதை மறைக்க முற்படும் முன்னாள் புகைப்படக்கலைஞன் ட்வைட் (க்ளைவ் ஓவன்) மூவரின் குறுக்கு நெடுக்காகச் செல்லும் கதைகள் - ஃப்ராங்க் மில்லரின் அசல் கதைகளான Sin City, The Big Fat Kill மற்றும் That Yellow Bastard மூன்றையும் அடிப்படையாகக் கொண்டவை. புத்தகங்களை நான் வாசித்ததில்லை.
சிறிது காலம் முன்புவரை, மோனிகா பெல்லுச்சி நடித்த Irreversible என்ற ஃபிரெஞ்சுப் படம்தான் சமீபத்தைய நினைவுக்குத் தெரிந்தவரையிலான குரூர வன்முறையின் உச்சம் என்று நினைத்துக்கொண்டிருந்தது (அதாவது, ரத்தம் தெரிவதுதான் வன்முறை என்ற ரீதியில் அன்றி), சின் சிட்டியைப் பார்த்ததும் புஸ்ஸென்று போயிற்று. கொ...யைக் கழற்றுவது என்று பேச்சுவழக்கில் எத்தனையோ முறை கேள்விப்பட்டிருப்போம், ஆனால், படத்தின் இறுதியில் Yellow bastard பாத்திரத்தின் விரைகளை, மஞ்சள் கிழங்கை மண்ணுக்குள்ளிருந்து உருவுவதுபோல ப்ரூஸ் வில்லிஸ் உருவுவதையெல்லாம் பார்க்க மனோதிடமற்றவர்கள், படம்பார்க்கப் போவதற்குமுன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்தல் நலம்!! துப்பாக்கியால் சுட்டாலும் தொடையிடுக்கில்தான் சுடுகிறார்கள், உடம்பெல்லாம் பிளாஸ்திரிகள் ஒட்டிய - கிட்டத்தட்ட பழங்கால Boris Karloff மாதிரி ஃப்ராங்கென்ஸ்டீனிய மார்வ், குழந்தைமுக நரமாமிசத்தின்னி கெவினை (Lord of the Ringsல் ஃப்ரோடோவாக வரும் எலிஜா உட்) அடித்துத் துவைத்து, கைகால்களை வெட்டியெறிந்து மீதியிருக்கும் முண்டத்தை நாயைவிட்டுத் தின்னவிடுகிறான், முரட்டுப் போலீஸ்காரனின் துப்பாக்கி பின்புறமாக வெடித்து, துப்பாக்கியின் குழாய் நெற்றியைத் துளைத்துக்கொண்டு நிற்கிறது....
வன்முறை என்பதற்கு இவ்வளவும். இதைத் தாண்டி, சில தருணங்களைத்தவிர கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், ஒளிப்பதிவு, இசை, கொடூரக் கார்ட்டூன்தனமான பாத்திரங்களை hyperbolize செய்வது இவற்றிலெல்லாம் எங்கேயோ போய் நிற்கிறது. இந்தியாவுக்கு வந்தால் எவ்வளவுதூரம் கத்திரிக்கப்படும் என்று தெரியவில்லை. ஒருவேளை அப்படியேவும் திரையிடப்படலாம், தெரியவில்லை. தனிப்பட்ட முறையில், படத்தின் பின்பாதியில் வேகம் குறைந்தமாதிரிப் பட்டாலும், கிட்டத்தட்ட கரிக்குச்சி (charcoal stick) தீற்றல் சித்திரங்கள்போல, ஏதோ நமது கணிப்பொறியில் ஃபோட்டோஷாப்பில் செதுக்கப்பட்ட படங்கள்போலப் படுமளவுக்கு அற்புதமான ஒளியமைப்புக்கள், காட்சியமைப்புக்கள்.
Film-noir என்றவகையிலான அடிதடி, குற்றப் படங்களில் இதுபோன்ற அதிதீவிரமான வன்முறையை வெளிப்படையாகக் காட்டும் படங்களும் உண்டு, அல்லது Fargo போல, வன்முறையை வெகு நாசூக்காக, போகிறபோக்கில் சொல்வதுமாதிரி ஏமாற்றும் அற்புதமான படங்களும் உண்டு. இரண்டுக்கும் இடைப்பட்டமாதிரி வெகு நளினமாகச் சொல்லும் கில் பில் போன்ற படங்களும் உண்டு. குப்பை இலக்கியம் (trash literature/trash fiction) என்பது தன்னளவில் துடைத்தெறியப்படவேண்டியதாகக் கருதும்போது, அந்தக் குப்பைப் புனைவுகளையே வேறொரு விதத்தில் திரித்துப் படமாக்கி, "குப்பையைப்பற்றிப் படமாக்கியது குப்பையில்லை" என்ற ரீதியில் படம் பார்ப்பவனையும் படத்தையும் prisoner's dilemma போன்றவொரு கதியில் இயங்கவிட சில இயக்குனர்களாலேயே முடியும். இந்த விஷயத்தில் ஒவ்வொரு முறையும் க்வென்டின் டாரன்டினோ ஜெயிக்கும்போது ராபர்ட் ரோட்ரிகஸ் சற்றுப் பின்தங்கியிருப்பதாகவே படும். இந்தமுறையும் அப்படித்தான் பட்டது. மூன்று கதைகள், ஒரு பிணத்துடன் காரில் பயணம் என்று பல்ப் ஃபிக்-ஷனின் பல தடங்கள் இருந்தாலும், இதுகுறித்த விமர்சனங்கள் இருதிசைகளிலும் இருந்தாலும், நான் கொடுத்தால் 'one thumb up' மட்டும்தான் கொடுக்கமுடியும். கார்ட்டூன்களின் வன்முறை, தவிர்க்கவேண்டிய வழிகள், நமது கலாச்சாரத்தில்.... என்று தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கலாம். யோசிக்கையிலேயே ஏதோ க்ளிஷேக் கடலுக்குள் குதிக்கப்போவதுபோலிருப்பதால், இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். மதி தனது வலைப்பதிவில் இதுகுறித்தும் எழுதியிருந்தார். படம் வெளியாகியும் அசட்டையாக இருந்து, தற்செயலாக அதைத் திரும்பப் படித்ததாலும், என் இன்னொரு நண்பனும் தூண்டியதாலும், ரோட்ரிகஸின் சில படங்களைப் பார்த்திருப்பதால், சரி, இதிலாவது டாரன்டினோவின் நிழலிலிருந்து வெளிவந்திருக்கிறாரா என்றும் பார்ப்பதற்காகப் போன படம். ம்ஹூம். நிழல் மிகப் பெரிதாக விழுந்திருக்கிறது என்பதுதான் சங்கடமான உண்மை. படத்திலேயே மிக சுவாரஸ்யமான பாத்திரமான மார்வ் வை விளம்பரங்களில் எங்கும் பார்க்கமுடியவில்லை...
படம் நன்றி:ஆமஸான்
Sunday, April 10, 2005
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
சே! இன்றைக்குப் போயிருக்கலாம் என்று தோன்றியது(உங்கள் பதிவைப் படித்ததும்). இந்த செவ்வாய்க்கிழமை போய்விட வேண்டியதுதான்.
நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கும் வி்ஷயம் என்ன தெரியுமா?
க்வெண்டின் டாரண்டினோ ஜேம்ஸ் பாண்ட் படத்தை எடுத்தால் எப்படியிருக்கும் என்று. பியேர்ஸ் ப்ராஸ்னன் வேறு அவருடன் கதைத்து, பாழாப்போன தயாரிப்பாளர்களால் எங்கயும் நகரலைப்போல. வசனங்களில் எப்படியெல்லாம் நக்கலடிப்பார் என்று நினைத்துக்கொள்கிறேன். :) :(
படத்தைப்பற்றி, செவ்வாய் இரவு.
(ஃபிக்ஷன் ஃபிக்ஷன் ஆக்ஷன் என்று 'கதாகாலக்ஷேபம்' ஸ்டைலில் எ-கலப்பையில் வருவதை யாராவது சரிசெய்தால் நன்றாயிருக்கும்...)
This is not a bug in E-Kalappai, but a feature of Unicode :-) When the Unicode renderer sees ik+sha, it automatically ligates the two together into 'iksha'.
To prevent the ligation, you'll need to enter the (non-printing) Unicode character ZWNJ (U+200C) between the 'ik' and 'sha'. E-Kalappai doesn't have a key for ZWNJ, so you'll have to use the character map accessory in Windows to insert it, like so: க்ஷ
BTW, another movie with a similar depiction of brutal, yet humorous, violence is Stanley Kubrick's 'A Clockwork Orange'.
Mathy, yes, Tarantino directing a James Bond movie will be a feast to watch! The thing is that the franchise would probably be be shut down after that :-)
Anonymous, thank you for the information. I will see what I can do. I have seen Clockwork Orange, too...
க்வொண்டின் டொரண்டினோ படமா இது? போன வார அமெரிக்க டாப் 10-ல் பார்த்த போதே, கொஞ்சம் விவகாரமான படமாக தான் தெரிந்தது. அதுவும் நம்மாளு ப்ரூஸ் வில்லீஸ் வேறு. இன்னமும் 4-5 வாரங்கள் கழித்து தான் சத்யத்திற்கு வரும். அதுவரை இருக்கவே இருக்கிறது சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் சச்சின். ;-)
க்வொண்டின் டொரண்டினோவின் ரிசர்வாயர் டாக்ஸின் அப்பட்டமான தழுவல் தான் ஹிந்தி "கான்ந்தே" ஜோக்காக இருந்தாலும், ஒரு மாதிரியாக போகும். அதிலும் "ஜானேகே ஹோகா ராமாரே" என்கிற பாடல் நன்றாக படமாக்கப்பட்டிருக்கும். ஒயிலான (இப்போது தான் ஞானியின் மாலடிமை எதிர்ப்பு பேட்டியை விகடனில் படித்தேன். Style-க்கு தமிழில் ஒயில் என்பது பொருத்தமானதாக இருக்கும் (ஒயிலாட்டம் ஞாபகம் வருகிறதா!) என்று தோன்றுகிறது என்று எழுதியிருக்கிறார்) சண்டைக் காட்சிகள் அதிகமாக இருக்கும். அது சரி,"ரிங் 2" எப்படியிருக்கிறது... டிரைய்லர் பார்த்ததிலிருந்தே ஒரு மார்க்கமாக தான் இருக்கும் போல தோன்றுகிறது.
நாராயண்: இது டாரன்டினோ படம் இல்லை, ராபர்ட் ரோட்ரிகஸ் என்ற டாரன்டினோவின் நண்பர் இயக்கிய படம் (அவரது Desperadoவை தேவியில் ஏதோவொரு தியேட்டரில்தான் பார்த்தேன்) டாரன்டினோ இதில் சில காட்சிகள் மட்டும் guest direct செய்திருக்கிறார். ரிங் 2 - புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... என்பது என் அபிப்ராயம்!! இது ஜப்பானிய திகில்பட ரீமேக் காலம் என்று நினைக்கிறேன். மாலடிமை! ஹிஹ்ஹிஹ்ஹீ, வேலையைப் பாருங்க தலைவா... ;-)
desparado-வை ஸ்டார் மூவிஸில் போட்டு தேய்த்து எடுத்த காலத்திலிருந்து பார்த்திருக்கிறேன். இங்கே வரட்டும் பார்க்கலாம். ரிங் ஜப்பானிய ரிமேக் தான். எடுக்கறதே 90 நிமிஷ படம் இதுல டொரண்டினோ கெஸ்ட் இயக்குநரா? ;-) தலைவா, இதெல்லாம் ஒவர்.
Once upon time in Mexico (Scored, Chopped and Directed by Robert Rodriguez ) என்ற படத்தை பார்த்துவிட்டு, இந்தாள் படமே பார்க்ககூடாது என்று இருந்தேன். நீங்கள் கூறியிருப்பது படத்தை பார்க்கும் ஆவலைத் தூண்டியுள்ளது. (சல்மா ஹயக்கை போஸ்டர்ல பெரிசா காட்டிட்டு படத்துல ஐஞ்சு நிமிஷம் காட்டிட்டு கொன்னுட்டாரு படுபாவி :( )
Best regards from NY! » »
Post a Comment