Wednesday, September 22, 2004

Dogville

போதுமடா சாமீ இந்த இம்சை. முதலில் நன்றாகக் கம்ப்யூட்டர் தெரிந்திருக்கவேண்டும், அல்லது நன்றாக எழுதவாவது தெரிந்திருக்கவேண்டும். எப்படித் தமிழை கம்ப்யூட்டரில் எழுதுவது என்று தெரிந்துகொள்வதற்கு முன்னமே தாவு தீர்ந்துவிட்டது. பிரச்னை இன்னும் முடிந்தபாடில்லை. குறள் என்ற மென்பொருளைப் பயன்படுத்தி இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதிலும், அதன் செயலியில் (word processor) தட்டச்சு செய்து, பின்பு அதை ப்ளாக்கரில் ஒட்டினால் font பிரச்னை. மைக்ரோசாப்ட் வர்டில் அடித்தால் தகராறு, கடைசியில் இந்த நோட்பேடில் அடித்து பின்பு ப்ளாக்கரில் ஒட்டுகிறேன். இதிலும், மெய்யெழுத்துக்கடுத்து இடைவெளி அடித்தால் அவ்வப்போது இடைவெளி விழுகிறது, அவ்வப்போது விழமாட்டேனென்கிறது. இருந்தாலும் பரவாயில்லை, நான் கணிப்பொறித் துறையில் இல்லை என்பதால் ஏதாவது பெரிய பிழை இருந்தாலும் தெரியாது, பொறுத்தருளவும். முக்கியமாக, Dogville என்றொரு படம் பார்த்தேன், அதைப்பற்றி அப்புறம் எழுதுகிறேன். லார்ஸ் வான் த்ரியெ (Lars Von Trier) என்ற டென்மார்க் நாட்டு இயக்குனரின் ஆங்கிலப் படம். படத்தில் பெரிய இம்சை யாரென்றால் நிக்கோல் கிட்மன் தான். மிக சமீபத்தில் அமெரிக்காவின் முக்கியமான திரைப்பட விமர்சகர்களில் ஒருவரான ரோஜர் ஈபர்ட்டின் அனைத்து விமர்சனங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. முன்பு ஒவ்வொரு முறையும் படத்தின் பெயரையும் ஈபர்ட்டின் பெயரையும் சேர்த்து கூகிளில் தேடவேண்டும், இப்போது அந்த இம்சை இல்லை. என்னதான் இருந்தாலும் அவரும் நம்ம ஊர் விமர்சனங்கள் போல எம்ஜியார் ரசிகர்களுக்கும் சேர்த்துத்தான் எழுதியாகவேண்டும்என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். Dogville விமர்சனத்தில் அவர் த்ரியெவின் அமெரிக்க எதிர்ப்பைப்பற்றி சலித்துக்கொள்ளவும் தவறவில்லை. த்ரியெ அமெரிக்கா வந்ததே இல்லை. அவருக்கு விமானப் பயணம் என்றால் அலர்ஜி. அது சரி. இருந்தாலும்...சரி ராமா, ஆரம்பித்தது ஆரம்பித்தாயிற்று, எழுதிவிடலாம். Dogville என்ற சிறிய நகரத்தில் (15 வீடுகள் - அமெரிக்காவில் கிராமம் என்ற விஷயமே காணாமல் போச்சு) புதிதாக வரும் க்ரேஸ் என்ற நி.கி (Nicole Kidman) ஐ சேர்த்துக்கொள்ள ஜனங்கள் எவ்வளவு சந்தேகப்படுகிறார்கள், சேர்ந்தபின்பு, ஏற்றுக்கொண்டபின்பு எப்படி சக்கையாகப் பிழிந்தெடுத்து இம்சைப்படுத்துகிறார்கள் என்பதை, வெறும் காட்சியமைப்புகளில் மட்டுமின்றி, காட்சிகளின் ஆமை வேகத்தின் துணையுடன் நம்மையும் பொறுமையிழக்க வைப்பதால், இறுதிக்காட்சியின் வன்முறையை நாம் அமைதியாகப் பார்க்க முடிகிறது. எனக்குப் படம் பிடித்திருந்தது. இது அனைத்து அமெரிக்காவின் நுகர்வோர் கலாச்சாரத்தைத் தாக்குவதாக ஒரு சில விமர்சனங்கள். இருக்கலாம், ஆனால் அது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் இல்லையா? கறைபடியாத கைகள் என்று உண்டா எங்கேயாவது?
பரவாயில்லை, இதைத் தட்டச்சு செய்ய முக்கால் மணி நேரம் ஆகியிருக்கிறது. இருந்தாலும், பலப்பல நாட்களுக்கடுத்து எழுதமுடிந்ததற்கு சந்தோஷமே.

No comments: