Tuesday, September 28, 2004

லொள் லொள் லொள்....

கடந்த மூன்று நாட்களாகப் படம் ஒன்றுகூடப் பார்க்கவில்லை. என்ன ஆச்சரியம்? சமீபகாலமாகப் படம் பார்ப்பது அளவுக்கதிகமாகப் போயிற்று - இப்போது சற்றுக் குறைந்திருக்கிறது. நேற்று lab லிருந்து தாமதமாக வீட்டுக்குப் போய் மூன்று டெக்கீலா ஷாட் அடித்துவிட்டு நன்றாக உறங்கிப்போனேன். நேற்று என்ன கடுப்பில் எழுதினேன் என்று தெரியவில்லை. எல்லாம் ஒரு ஆதங்கம் தான். காஞ்சிபுரத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்குப் போயிருந்தேன்; கௌதம சித்தார்த்தனின் 'பச்சைப் பறவை' சிறுகதைத் தொகுப்பு என்று நினைவு (அவர் அங்கு இல்லை). ஒரு நண்பன் தனது மதிப்புரையை வாசித்தான், அனைத்தும் முடிந்தபின்பு டி ஸிக்காவின் 'Bicycle thief' (இதை ஏன் இப்போதுவரை தமிழில் அடிக்கடி 'பைசைக்கிள் திருடர்கள்' என்று மொழிபெயர்க்கிறார்கள் என்று தெரியவில்லை) படம் போட்டார்கள். ஏற்கனவே சற்று அதிருப்தியில் இருந்தேன், அனைத்தும் முடிந்த பிறகு மெதுவாக பஸ் ஏறி சென்னை வந்து சேர்ந்தேன். வாசிக்கப்பட்ட கட்டுரை எனக்கு அபத்தமாகப் பட்டதா, அல்லது, இதைத்தானே நாம் அறிவியலில் செய்துகொண்டிருக்கிறோம், இப்படிக் கட்டுரை வாசித்து, விவாதித்து இலக்கியம் 'செய்ய' இதுவும் மற்றொரு '....logy' தானா என்று யோசிக்கையில், பரீட்சார்த்த எழுத்துக்கள் அனைத்தும் மேற்கத்தியக் கோட்டுகளுக்குள் கர்ச்சீப்புகள் போலத் தலைகவிழ்ந்து கிடக்க (உருவு போர்கேஸை (h ஐக் கண்டுபிடிக்க இயலவில்லை என் கம்ப்யூட்டரில்), உருவு கொர்த்தஸாரை, மிலோரட் பாவிக்கை, டோல்க்கீனை (இப்போது டோல்க்கீன் தூக்கியெறியப்பட்டிருப்பார், ஏனென்றால் Hollywood அவரது பெரும்படைப்பைப் படமாகஎடுத்து நிறையத் துட்டுப் பார்த்துவிட்டார்கள்!), மிலன் குந்தேராவை, JG பல்லார்டை, இத்யாதி இத்யாதி), தமிழில் நான் நாயாகத் தேடியலைந்த தனித்துவம் இறுதிவரை கிடைக்காமல் போனதில் எனக்குப் (என் invertebrateness க்கு) பெரும் பங்கு உண்டென்றாலும், கோணங்கி போன்ற அதீத மயக்கந்தரும் எழுத்துக்கள்கூட என்னைப் பிடித்துவைக்க இயலாமல்போனதற்குக் காரணம், அவை எழுப்பிய அனைத்துப் பிம்பங்களிலும் இருந்த வசீகரம், ஆச்சரியம், பிரமிப்பு ஆகியவை, அதன் உட்கட்டமைப்புச் சிக்கல் என்று ஒன்று முதலில் இருக்கிறதா என்ற சலிப்பை ஏற்படுத்தியது என்னவோ உண்மை. அப்படி ஒன்று இருந்துதான் ஆகவேண்டும் என்று நான் theorize செய்தால், என்னைவிடப் பெரிய மடையன் யாரும் இருக்க முடியாது - இங்கு நான் செய்ய முயல்வதெல்லாம், அவ்வளவு ஈடுபாட்டுடன் இருந்த நான் ஏன் இப்படி விலகிப் போனேன் என்று அலச முயல்வதே. இப்படிப்பட்டவர்களுக்கு, தன் கதை அல்லது புத்தகம் பிரசுரிக்கப்படாததும் ஒரு பெரிய காரணமாக இருக்கும், புலம்பித் தள்ளுவார்கள்; இங்கே எப்படிஎன்பதை உங்கள் ஊகத்துக்கு விட்டுவிடுகிறேன். ஏன் விலகினேன்? சுருக்கமாகச் சொல்லப்போனால், அப்போது இருந்த சூழல், hypersophisticated ஐரோப்பிய, அமெரிக்க சமுதாயங்கள் அவர்களது societal, psychological context ல் உருவாக்கிய இலக்கியங்களை மடத்தனமாக நமது வளர்ச்சிகுன்றிய (அடிரா சக்கை அமெரிக்க அடிவருடி!!) நில, மனப்பிரதேசத்தில் பொருத்த முயன்று மூக்குடைத்துக்கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். Hypersophisticated என்பதை 'அதிக துட்டு, பணக்கார சமுதாயம்' என்று அரைவேக்காட்டுத்தனமாகக் கொள்ளாமல், நிலைகெட்ட அரசியல் நிலவரம் எப்போதும் தாண்டவமாடும் தென்னமெரிக்க நாடுகளின் இலக்கியத்தையும், அதன் மனப்போக்கின் சிக்கல்களையும் உள்ளடக்கியதாக அர்த்தம் செய்துகொள்ளவேண்டும்; நம் நிலப்பிரதேசத்தில், உளச்சிக்கல்கள் என்று ஏதாவது உள்ளதா? தெரியவில்லை எனக்கு. நமது அன்றாட வாழ்க்கையின் அனைத்துத் துகள்களையும் வேற்றிடத்திலிருந்து பெறுகிறோம்; பேண்ட் சட்டை போட்டுக்கொண்டுதான் நமது கலாச்சாரத்தைப்பற்றி எழுதுகிறோம். நமது நோய்கள் மேற்கில் கண்டறியப்பட்டவை, நமது மருந்துகள் மேற்கில் கண்டறியப்பட்டவை.

இப்படித் திசைதவறிக் குரைப்பதற்குக் காரணம் என்னவென்றால், அறிவியலை இலக்கியவாதிகள் தவிர்ப்பதும், இலக்கியத்தை அறிவியலாளர்கள் புழு மாதிரிப் பார்ப்பதும்தான். நான் கல்லூரியில் படித்தபோது ஒரு பத்திரிகையை நடத்தி வந்தோம், நிர்வாகத்தரப்பிலிருந்து பொதுவாக நல்ல ஒத்துழைப்பு என்றாலும், ஒரு குறிப்பிட்ட ஆசாமி (எங்களது அப்போதைய துணைவேந்தர்), "கதை கவிதை எழுதறவனெல்லாம் திருடன் க்கிக் கிக் கீ" என்றார். நாசமாகப் போக என்று நினைத்துக் கொண்டேன் - அவரது எண்ணம் என்னவென்றால், 'சும்மாப் புத்தகத்தை மட்டும் படிடா வெண்ணெ, பத்துப் புழுவோட பதினொண்ணா இருந்தா போதாதா உனக்கு' என்பது. சரி தான். இலக்கியவாதிகளுக்கு அறிவியல் என்றால் அலர்ஜி. திரும்பக் கற்காலத்துக்குப் போனால் இப்போதைவிட இன்னும் நன்றாக எழுதலாம் என்று நினைப்பார்களோ தெரியவில்லை. எட்கர் ஆலன் போ, நபக்கவ், ஈக்கோ போன்றவர்களெல்லாம் இப்படித்தான் கற்காலத்துக்குப் போய், குகைகளுக்குள்ளிருந்து கொண்டு சுவற்றில் செதுக்கித் தள்ளினார்கள்!


4 comments:

Mookku Sundar said...

அண்ணே...என்னா சொல்ல வர்றீங்க...??

நல்லா எழுதறீங்க..ஆனா திருகித் திருகி எழுதறீங்களே...

PKS said...

"Namathu noikal merkil kandariya patavai. namathu marunthukalum merkil kandariya patavai."

My comment: what a profound statement. In two lines, you explained today's tamil literary world.

Keep writing. Thanks. - PK Sivakumar

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ரொம்ப சுவாரசியமா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க. கொஞ்சம் நிறத்தை மட்டும் மாத்திட்டீங்கன்னா நல்லா இருக்கும்.

-மதி கந்தசாமி

சன்னாசி said...

அடடே, கமெண்ட்டுகள் இருப்பதை பார்க்கவே இல்லை நான் - நிறத்தை மாற்றிவிட்டேன் - இப்போது சற்றுத் தெளிவாக இருக்குமென்று நம்புகிறேன். இருந்தாலும் கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு.