Thursday, September 23, 2004

ஆர்வ ஊற்றும் என் சிக்கலும்...

ஆங்கிலத்தில் சிலமுறை வலைப்பதிவுகள் செய்ய முயன்று பின்பு கைவிட்டாயிற்று, இப்போது இது எவ்வளவு நாட்கள் வருமென்று தெரியவில்லை. சில ப்ளாக்குகளை மேய்ந்தபோது எதிர்வினைகள் மிகமிகச் சொற்பமாகவே இருந்தன - என்ன எழுதுவது என்று ஒரு குழப்பம் வேறு - நான் இன்று எழுந்தேன், வந்தேன், போனேன் என்பதா இல்லை வேறு ஏதாவது எழுதுவதா என்ற நினைப்பு வேறு. ஓவியங்களில் ஆர்வம் உள்ளவர்கள் ஆர்ட்கைவ் என்ற வலைத்தளத்தை ஒருமுறை பாருங்கள் - மிக நல்ல தொகுப்பு. எனக்கு மிகவும் பிடித்த மேக்ஸ் எர்ன்ஸ்ட்டின் The entire City என்ற ஓவியத்தை எனது டெஸ்க்டாப்பில் வைத்திருக்கிறேன்; முதல் தடவை அதைப் பார்த்தபோது கிறுகிறு என்றது; இதைக் கற்பனை செய்துபாருங்கள் - அந்தப் படத்தைவிட்டு உங்கள் பார்வைப்பரப்பு ஒரு இம்மி கூட வெளியேற வாய்ப்பில்லாமல் இருந்தால் - அப்போது உங்கள் பார்வை அதில் குவிந்தால் - அதன் நிறங்கள் உங்களையும் தலைசுற்ற வைக்க வாய்ப்புண்டு. கணிப்பொறித் திரையில் பார்ப்பதும் லூவர் அருங்காட்சியகத்தில் பார்ப்பதும் ஒன்றாகாததுதான், இருந்தாலும்....


அவ்வப்போது இந்த மாதிரி ஆர்வங்கள் வருவதுண்டு, பின் சட்டென்று அவை மறைந்துபோவது வெறும் சோம்பேறித்தனத்தினால் மட்டும் அல்ல என்றே நினைக்கிறேன் - 'போகும்போது என்னத்தைக் கொண்டுபோகப்போறே' என்ற விட்டேத்தித் தத்துவ விசாரணைகளைச் சின்ன வயதில் கேட்காததுபோல் விட்டிருக்கலாம். கல்லூரி நாட்களில் இந்தமாதிரித் தத்துவ மோதல்களெல்லாம் பரீட்சைக்கு முந்தைய விடுமுறை நாட்களில்தான் வரும். இந்த dodgy போக்கு தேவைதான்; இல்லையென்றால் வாழ்க்கை சுரத்தில்லாமல் போய்விடும்.


Funes the memorious என்ற அற்புதமான கதையை சிலவருடங்களுக்கு முன்பு படித்தேன். அளவுக்கதிகமான ஞாபகசக்தியும் ஒரு சாபமே. ஆனாலும் அந்த விஷயத்தில் சபிக்கப்பட்டவர்களாக இருப்பதையே மனம் விரும்பும் என்று நினைக்கிறேன். மேலும் படிக்க விரும்பினால், இந்த கோனார் நோட்ஸ் படிக்கவும். எங்கோ சும்மா பிடித்தது. நல்ல கட்டுரைகள் வேறு இருக்கும்.

விட்டல விட்டல பாண்டுரங்க, இன்றைய பஜனை முடிந்தது....

1 comment:

Santhosh Guru said...

//அவ்வப்போது இந்த மாதிரி ஆர்வங்கள் வருவதுண்டு .... இந்த dodgy போக்கு தேவைதான்; இல்லையென்றால் வாழ்க்கை சுரத்தில்லாமல் போய்விடும். //

பல முறை இதேபோல் நானும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அடிக்கடி இந்த விட்டேத்தி தத்துவ விசாரணைகள் வந்து தொலைத்து ஆர்வத்தை குலைத்துவிடுகிறது. காலம், இந்த குழம்பிய குட்டையினை சில நாட்களுக்கு பிறகு தெளிய வைக்கிறது. ஆனால் எப்படியாவது தப்பித்தவறி , "விட்டேத்தி" கல்லினை குளத்தில் விட்டெறியப்பட்டு விடுகிறது. என் குளம் தெளிந்து, உறைய போகும் நாள் என்னாளோ.

( பெரிய லாடு லங்கோடு மாதிரி நான் பேசுவது போல தெரிந்தாலும். இதை நான் என் அனுபவத்தில் கண்டுள்ளேன் )