Thursday, September 30, 2004

அரசியல் - அங்கேயும் இங்கேயும்

இன்று ஜார்ஜ் புஷ், ஜான் கெர்ரி இருவருக்கிடையிலான முதல் விவாதம் - யாருக்கு 2004 ல் அமெரிக்க ஜனாதிபதியாக அதிகத் தகுதி இருக்கிறதென்று தீர்மானிக்க நடத்தப்படும் மூன்று விவாதங்களில் முதல் விவாதம். பொதுவாக இந்த விவாதங்கள் ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படும் - இந்த முதல் விவாதம் மயாமி பல்கலைக்கழகத்தில் நடக்கிறது. எனக்கு என்னமோ இந்தமுறை ஜெயிக்கப்போவது புஷ்தான் என்று பட்சி சொல்கிறது - கெர்ரி ஜெயலலிதாவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய லட்சம் விஷயங்கள் உள்ளன. எப்படி ஒரு விஷயத்தைக் கிளிப்பிள்ளை மாதிரி ஆயிரம் தடவை சொல்லி ஜனங்களை மூளைச்சலவை செய்வது, எப்படித் தொண்டரடிப்பொடிகளை விட்டு சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்துவது போன்ற விஷயங்கள். முதல் விவாதம் இராக் போரைப்பற்றியது - இருந்தாலும், இந்தத் தேர்தல் முற்றிலும் அதைச்சுற்றியே அமைந்துள்ளதென்பது மறுக்கமுடியாத உண்மை. புஷ் தோற்கவேண்டுமென்று நான் நினைத்தாலும், கெர்ரி சவலைப்பிள்ளை மாதிரி 'நான் வியட்நாமில் மூன்று பதக்கங்கள் வாங்கினேன்' என்று வெறுமனே கத்திக்கொண்டிருந்ததுதான் மிச்சம். புஷ்ஷின் குடியரசுக் கட்சியின் இரண்டாம் மட்ட ஆசாமிகள் கெர்ரி ஒரு எடக்குமடக்கு ஆசாமி (flip-flopper) என்ற ரீதியில் ஆதௌ கீர்த்தனாரம்பத்தில் தொடங்கி, நேற்றுவரை அவரைத் துவைத்துத் தொங்கவிட்டுவிட்டார்கள். எந்த விஷயத்திலும் ஒரு நிலையான முடிவெடுக்க இயலாதவர் கெர்ரி, அதனால் ஜனாதிபதியாயிருக்க லாயக்கில்லாத ஆசாமி என்று ஜனங்களின் மூளைக்குள் சில மாதங்களுக்கு முன்பு அடிக்கத்தொடங்கிய டமாரத்தை அவர்கள் நிறுத்துவதாயில்லை. நான் மிகவும் ஆதரித்த டீன் ஒரு ஆவேசத்தில் தன் வாய்ப்பைக் கோட்டைவிட்டபிறகு, போனால் போகிறதென்று கெர்ரி ஏதாவது உருப்படியாகச் செய்யமாட்டாரா என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். இன்று பார்க்கலாம். நேற்று MSNBC சேனலில் பாட் புக்கநன், விவாதத்தின் முடிவு முதல் அரைமணி நேரத்தில் தெரிந்துபோய்விடும் என்றார் - புக்கனன் குடியரசிக்கட்சி சார்புடையவர் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இதை எழுதுவதற்கு இரண்டு காரணங்கள்.

1) என் அனுமானம் - புஷ், 'நீ என்னமும் சொல்லிக்கோ, நான் சொல்றதைத்தான் சொல்வேன் - இராக்கில் அமெரிக்கா வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது, நாம் ஜெயித்துக்கொண்டிருக்கிறோம் போன்ற பஜனைகளைத் தொடர்ந்து பாடுவார், கெர்ரி வாயைத் திறந்தால், ஜிம்மி கார்ட்டருக்கு ரீகன் 'There you go again' என்று ஆப்பு வைத்ததுபோல, 'பாருங்க சாமியோவ் கெர்ரி ஃப்ளிப்ஃப்ளாப்புகிறார்' என்று மடக்கப்போகிறார்! என் அமெரிக்க நண்பனொருவன், கெர்ரி தான் இதுவரை போட்டியிட்ட தேர்தல்கள் எதிலும் தோற்றதில்லை (பெரும்பாலும் என்றான் மறுநாள்) என்றான் - பொறுத்திருந்து பார்க்கலாம்.

2) இதுபோன்ற விவாதங்கள் தமிழ்நாட்டில் நடக்க வாய்ப்புண்டா? ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒரே மேடையில் சந்திப்பார்களா என்ன? ஜெயலலிதாவுக்கு எல்லாம் பச்சையாக இருக்கவேண்டும், நாத்திகவாதி கருணாநிதிக்கு எல்லாம் மஞ்சளாக இருக்கவேண்டும். அது போகிறது, அதற்குமேல் என்ன பேசுவார்கள்? போதாதகாலத்திற்கு கருணாநிதி தரையில் உட்காரவேண்டியிருக்கும். உடனே உடன்பிறப்பு சாதிவெறி என்று, வேறெந்தப் பண்ணிக்குட்டிகள் சாதிக்கட்சிகள் ஆரம்பித்திருக்கிறதென்று பார்த்து அவற்றிடம் ஆதரவு கோருவார். அம்மாவின் தொண்டரடிப்பொடிகள் கருணாநிதி காரை மறித்து கும்மாங்குத்து குத்த இரண்டு மைல் தள்ளி தயாராக நிற்கும் (மகளிரணி சேலையை வைத்து என்ன வித்தை காட்டும் என்பதை நாகரிகம் கருதிக் கூறாமல் தவிர்க்கிறேன்). அவ்வளவுதான். தமிழ்நாட்டு மக்கள்? கிடக்கிறான் மடப்பய. இந்தக் கோமாளிகள் ஆண்டும் தமிழ்நாடு பீகார் மாதிரி ஆகாமல், முன்னேறிய மாநிலமாக இருக்கிறதென்றால், அதே தமிழனின் சுய அறிவாலும் உழைப்பாலும்தான். எப்போது எம்ஜியார் 'அதிமுக பிரைவேட் லாரி கம்பெனி' தொடங்கினாரோ, எப்போது கருணாநிதிக்கு சாதிப் பேதி தொடங்கியதோ, அப்போதே அரசாங்கம் மேல் தமிழர்கள் ஆர்வம் இழந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். குறைந்தபட்சம் நானாவது இழந்துவிட்டேன். ஒவ்வொரு தடவை அமெரிக்க அரசியலைப் பார்க்கும்போதெல்லாம், எவ்வளவு தூரம் அரசியல்வாதிகளை மக்கள் accountable ஆக வைத்திருக்கிறார்கள், ஒரு சின்ன தவறைக்கூட மீடியாவும் பொதுஜனங்களும் பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டு, தவறு செய்தவனின் சிண்டைப் பிய்த்தெறிந்துவிடுகிறார்கள் என்பதைத்தான் மிக ஆச்சரியத்துடன் பார்ப்பேன் (விதிவிலக்குகள் எங்கேயும் உண்டு - மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி பணம்கொடுத்து இளமானபங்க வழக்குகளிலிருந்து தப்பிப்பதும் உண்டு, ஆனால் பத்திரிகைகளும் தொலைக்காட்சியும் குதறி எடுத்துவிடும்). தமிழ்நாட்டின் மிகப்பெரும் சேனல் சன் டிவி திமுகவின் வால், ஜெயா டிவி அதிமுகவின் கொம்பு, இடைப்பட்ட சேனல்கள் நடுநிலைமையுடன் இருக்க முயன்றால் அவற்றுக்கு இம்சை - இது வெறும் MHz பிரச்னையா என்ன? தினமலர், இன்னும் எம்ஜியார் உயிரோடு இருக்காரு என்று நினைக்கும் கனவுலக வியக்தி, மற்றப் பத்திரிகைகள் நடுநிலைமை எடுத்தால், அவற்றின்மேல் அம்மாவின் தாக்குதல் - தமிழ்நாடு ஜனநாயக மாநிலமா? சந்தேகந்தான். இவ்வளவுக்கும் கருணாநிதி? தன்னைக் கைதுசெய்தபோது கூப்பாடு போட்டுப் புலம்பியவர், ஜெயமோகன் அவரைப்பற்றிக் குறிப்பிட்டதும் முரசொலியில் மொட்டைக்கடுதாசி எழுதுகிறார்! இதிலும் பெரிய அசிங்கம் என்னவென்றால், அந்த விஷயம் ஆங்கில வலையில் பதிவாகவே இல்லை - link கொடுக்க கூகிளில் தேடு தேடென்று தேடினால், ம்கூம், nada. (09:01:2004 - பத்ரி அவர்களின் எதிர்வினையையும், இணைப்புகளையும் தொடர்க, நன்றி திரு. பத்ரி, மன்னியுங்கள்!) ஆங்கில ப்ளாக்கர்களாவது இதைப் பதிவுசெய்யுங்கள். கருணாநிதி யானையாம், ஜெயமோகன் ஏதோ ஒரு வானரமாம் - ஒரு பிரபல எழுத்தாளருக்கு இந்த மிரட்டல் விடப்படுகிறதென்றால், முருகனுக்கும் சுப்பனுக்கும் என்ன கதி?

2 comments:

Badri Seshadri said...

கருணாநிதி, ஜெயமோகன் விவகாரம் பற்றி: ஐயா நீங்க ஊருக்குப் புதுசு! இதையெல்லாம் மிக விரிவாக பேசி, எழுதி விட்டார்கள் தமிழ் பதிவர்கள். ஆங்கிலப்பதிவுகள் இதைப்பத்தியெல்லாம் கண்டுக்க மாட்டாங்க.

கூகிள் தேடுதல் கொஞ்சம் மோசமா இருக்கு தமிழ் வலைப்பதிவுகளைப் பொறுத்தமட்டில்.

என்னுடைய பதிவுகள் இரண்டு:
1. http://thoughtsintamil.blogspot.com/2003/10/blog-post_15.html
2. http://thoughtsintamil.blogspot.com/2003/10/blog-post_16.html

இதில் இரண்டாவது பதிவில் கருணாநிதியின் கவிதைக்கு திமுக தளத்திலிருந்து நேரடித் தொடுப்பு கொடுத்திருந்தேன். அவர்கள் திறமையாக 'கவிதை'யை கட் செய்து விட்டனர். அதனால் என்ன? திண்ணையில் பத்திரமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதோ உங்களுக்காக:

http://www.thinnai.com/poems/pm10160313.html

Anonymous said...

Hi Badri

Here is the correct Murasoli link to the poem:

http://www.thedmk.org/murasoli/2003/kaditham/2k31014k.htm

Thanks
Subbu