Monday, September 27, 2004

சரோட் கச்சேரி

நேற்று பக்கத்து நகரமொன்றில் உஸ்தாத் அம்ஜத் அலி கானின் ஸரோட் கச்சேரிக்குப் போயிருந்தேன், நண்பன் ஒருவனுடன். அவரது இசையை ஆந்திராவில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது கேட்டதுண்டு; நான் பெரிய சங்கீத மேதாவி இல்லையென்றாலும், ஆர்வத்தின்பேரில் random ஆகக் கேட்பதுண்டு - சைக்காவ்ஸ்கி, ச்சோப்பின், பார்தோக் போன்றவர்ளை இப்படித்தான் பிடித்தேன் - மொஸார்ட் மற்றும் பீத்தோவான் இருவரும் தாமே நம்மிடம் வந்து சேர்வார்கள்! இப்படி ஒருநாள் ஆந்திராவில் ஒரு கொளுத்தும் சாயங்காலத்தில் அம்ஜத் அலி கானைக் கேட்டுக்கொண்டிருந்தபோது உள்ளே வந்த என் நண்பன், என்னடா சாவு மியூசிக் கேட்டுட்டிருக்கே, DD யில போடற மாதிரி" என்றான் (தமிழ் பேட்ஸ்மேன்கள் பொறுக்க: என் நண்பனும் தமிழ்தான்!). ஆனாலும் மாணவ வாழ்க்கையில் (இப்போதும் மாணவன்தான் என்றாலும்) கச்சேரிகள் எதற்கும் போனதில்லை என்பதால், கச்சேரிக்குப் போகுமுன்பே கச்சேரி பிடித்துப்போகும் என்ற முடிவிற்கு வந்துவிட்டேனோ இல்லையோ தெரியவில்லை. இருந்தாலும், என் டுபாக்கூர் டேப்ரிக்கார்டரில் கேட்டதை நேரடிக் கச்சேரியுடன் ஒப்பிடக்கூடாதுதான் - அதுவும் ஒருவகையில் பிடித்திருந்தது. ராகம் கண்டுபிடிப்பது போன்ற சன்டிவி fancy shit அபத்தங்களையெல்லாம் உதறமுடிந்தால் சங்கீதத்தை யார்வேண்டுமானாலும் ரசிக்கலாம் தானே? தி.ஜானகிராமனுடைய கதை ஒன்று - பெயர் நினைவில் இல்லை -ஒரு வெள்ளைக்காரன் வந்து நாதஸ்வர வாசிப்பைக் கேட்டு, அவனுக்கு அந்த வாசிப்பு என்ன உணர்த்தியது என்று கூறுவதும், அந்த விவரிப்பு, வித்வானது ராகத்துடன் சரியாக ஒத்துப்போவதும்....யாருக்காவது நினைவிருக்கிறதா அந்தக் கதையின் பெயர்?

அதுபோல்தான் எனக்கும் இருந்தது. இரண்டரை மணி நேரம் கேட்டேன்; திரும்பி வரும்போது காரின் சிடி ப்ளேயரை அணைத்துவிட்டேன். அல்லது அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்து என் காதில்எதுவும் ஏறவில்லையா என்று தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்பு எழுதியதுபோல, சில சந்தர்ப்பங்களில் மூளைக்குள் சிலீர் சிலீரென்று ஏதோ நொறுங்குவது போல - இல்லையில்லை, உருகுவது போல உணர்வு, பதறும் மூளை உடனே, எத்தனை neurotransmitterகள் அலைபாய்கின்றன என்ற குறுக்குவழியில் படீரென்று இட்டுச்சென்றுவிட்டது. இதுதான் வித்தியாசம் - சில வருடங்களுக்கு முன்பு இதை எழுதியிருந்தேனென்றால், மனது பதறுகிறதென்று எழுதியிருப்பேன், இப்போது மூளை பதறுகிறதென்று எழுதுகிறேன்! Manuscriptகள் எழுதப் பழகிக்கொண்டிருக்கும் கையைச் சற்று நிதானிக்கச்செய்தால் நன்றாயிருக்கும், ஆனால் அதை நிதானிக்கச்செய்ய நான் யார் அல்பன்! பிரம்மராஜனின் 'சித்ரூபிணி' என்ற நெடுங்கவிதையை முன்பு வாசித்தேன் - அது ஒரு ultimate காதல் கவிதையாகப் பட்டது - தமிழ்ப் புலவர்களால் அப்படி செத்தாலும் எழுதமுடியாது - அந்தவகையான urbanized psycheக்குத் தமிழில் வரவேற்புக் குறைவு. சுஜாதாவை விட்டால் பேண்ட் சட்டை போட்டவர்களைப்பற்றி தீவிர இலக்கியத்தில் எழுத யாருமில்லையென்ற ப்ரிதாபகர நிலைமைக்கு யார் காரணம்? முருகன் கந்தன் குசுக்குணசொரூபி என்று பெயர்களைமட்டும் வைத்து இத்தாலோ கால்வினோ மாதிரிக் கதைகள் எழுதி பிலிம் காட்டலாம், அல்லது சாரு நிவேதிதா மாதிரி இரண்டுங்கெட்டான் கதைகளை எழுதி தன்னை ஒரு சிதைந்த soul ஆகக் காட்டிக்கொள்ளலாம். அதுகூடஒரிஜினல் அக்மார்க் சிதைந்த soul கிடையாது; ஒத்துக்கொள்கிறேன் அவர் படைப்புக்கள் காப்பியடித்தது கிடையாது, அந்த சிதைந்த soul தான் அப்பட்டமான ப்ரெஞ்சு காப்பி! சீக்கிரமாக அவருக்கு யாராவது தமிழ்நாட்டின் Jean Genet என்று பட்டம் கொடுத்துவிட்டால் தேவலை. என் வாழ்க்கையிலேயே நான் செய்த கீழ்த்தரமான விஷயமாகக் கருதுவது காலச்சுவடு வாங்கி, வாரமலர் துணுக்கு மூட்டை மாதிரி அதன் 'எதிர்வினை' பகுதியை முதலில் படித்ததுதான் - அந்தப் பகுதியைக் குழாயடிச்சண்டை மாதிரிச் செய்ததில் சாருவுக்கும் 'பெரும் ஆக்கப் புலி' ஜெயமோகனுக்கும் பெரும் பங்குண்டு! நான் மிகவும் மதித்த ஜெயமோகன், 'விஷ்ணுபுர'த்தின் ஒவ்வொரு பக்க மூலையிலும் பேயாழ்வார் மாதிரி வந்து அமர்ந்துகொண்டு அறிவுப்பீற்றலடித்து என்னை இம்சைப்படுத்தியது என்ன, கடவுளே! தமிழர்களாகிய நாம் பாவம் அவரையும் ரஜினிகாந்த் மாதிரிச் செய்து நாறடித்துவிட்டோமே, கடவுள் நம்மை மன்னிப்பாரா?

2 comments:

PKS said...

Hi, I came to know about this blog only now. You have a natural and spantaneous way of expression that knows no inhibitions. Whether others agree with your views are not, (I dont know if I agree with all your views either :-) ), please keep up writing. We need this kind of writing in Tamil. It pours a bucket of fresh air. Also a request. Can you change your background and foreground colors such that it is easy to read and does not strain the eyes. Thank you. Regards, PK Sivakumar

Mookku Sundar said...

இது சுளுவா பிரியுது நைனா...

தொடர்ந்து எழுதுங்க...

ஒரு ஒரு எழுத்துல்யும் வெறி தெரியுது. எழுத்துக்கள் அலறி அடிச்சுகிட்டு வந்து உழுந்தா மாதிரி...

நடத்துங்க....:-)